அ.தி.மு.க விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க-விலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்பு தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இம்முடிவுகள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டது. அதேசமயம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முடிவின்றி சட்டத்திற்கு புறம்பாக நடந்த பொதுக்குழுவின் முடிவுகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இருவரது மனுக்களையும் பரிசீலித்துவரும் தேர்தல் ஆணையம் விரைவில் இருவருக்கும் விசாரணைக்கான நோட்டீசை அனுப்ப இருக்கிறது.