நடிகர் விஜய்யின் இரண்டு இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்திற்கு மக்களிடம் இருந்த அமோக ஆதரவால் கோடிக்கணக்கில் நல்ல லாபம் கிடைத்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து. மேலும் இந்த படத்தில் நடிகராக நடித்த விஜய்க்கு 50 கோடி ஊதியமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல நடிகர் விஜய்யிடமும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று வருமானவரித்துறையினர் விசாரித்தனர்.
இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது. அதே போல விஜய்யை சென்னை அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டு விஜய்யின் காரிலே அழைத்துச் சென்ற நிலையில் சென்னையில் இருக்கும் விஜய்யின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலிகிராமத்தில் உள்ள வீடு , அலுவலகம் , அதே போல நீலாங்கரையில் உள்ள மற்றொரு வீடு என இரண்டு இடத்திலும் வருமான வரித்துறை சோதனை தொடர்கின்றது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல #வரிஏய்ப்புவிஜய் என்ற ஹாஷ்டாக் டிவீட்டரில் ட்ரெண்டாகி மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.