நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய ஒன்றிய, மாநிலங்கள் மற்றும் பன்னாட்டு அளவில் வழங்கப் பெறும் இலக்கியத்திற்கான உயரிய விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துப் பல்வேறு மாதங்கள் ஆகிறது. எனினும் எழுத்தாளர்கள் பலருக்கும் இதுவரையிலும் வீடுகள் வழங்காமல் தமிழக அரசு காலம்தாழ்த்தி வருவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ் அறிஞர்களுக்கு வீடுகள் வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுவது வன்மையான கண்டனத்திற்கு உரியது. தம் அளப்பரிய எழுத்துத் திறத்தாலும், கற்பனை வளத்தாலும், அறிவாற்றலாலும் காலத்தால் அழியாத காவியங்கள் படைத்து அன்னைத் தமிழுக்குப் பெருமை சேர்த்த தமிழறிஞர் பெரு மக்கள் வறுமையில் வாடுவதைக் கருதி, அவர்களுக்கு நிரந்தர வாழ்விடம் அமைத்துக் கொடுத்து, துயரமிக்க வாழ்வில் சிறிதளவினையாவது துடைக்கத் தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
இருந்தாலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வீடுகள் உடனே வழங்கப்படுவதும், சிலரினை தொடர்ந்து காத்திருப்புப் பட்டியலில் வைத்திருப்பதும், பலருக்கு வீடுகள் வழங்க மறுப்பதும் தி.மு.க அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது. உயிர் நிகர் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிய சான்றோர் பெரு மக்களுக்கு நியாயமாக சேரவேண்டிய உரிமையைத் தர மறுத்து, அதிலும் தமிழக அரசு பாகுபாடு பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கவே முடியாத பெரும் கொடுமையாகும். எனவே தி.மு.க அரசு தமிழறிஞர் பெருமக்களுக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுவதில் எந்த வித அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் அளிக்காமல் தமிழ் இலக்கியத்திற்கான தமிழ்நாடு அரசின் விருதுகள், இந்திய ஒன்றிய அரசின் விருதுகள் மற்றும் பன்னாட்டு உயரிய விருதுகள் பெற்ற தமிழறிஞர்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்து விரைந்து வீடுகள் வழங்க வேண்டும். அதிலும் குறிப்பாக அரசியல் செல்வாக்கு இருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை கைவிட்டு, வீடு மற்றும் நிலமில்லாது உண்மையிலேயே வறுமையில் வாடும் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கூறியுள்ளார்.