வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இட்லி வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் ரூ.24000-ஐ அபேஸ் செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராணி என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டின் முன்பு இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அங்கு மர்ம நபர் ஒருவர் அவரது கடைக்கு அடிக்கடி வந்து இட்லி சாப்பிட்டு விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மர்மநபர் கடைக்கு சென்ற போது நாகராணியிடம் இந்த வாரம் எனது மருமகளுக்கு வழகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் 300 பேர் சாப்பிடும் அளவுக்கு இட்லி, வடை ஆகியவற்றை தயார் செய்து கொடுக்க வேண்டும் எனக் கூறினார். அதற்கு சம்மதம் தெரிவித்த நாகராணியிடம் அந்த மர்மநபர் என்னிடம் ரூ.2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.2 லட்சம் உள்ளது. இதனால் உங்களிடம் சில்லறை பணம் எதாவது இருந்தால் தருமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து உங்கள் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு எனது ரூ.2 லட்சத்தை வாங்கி கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் நாகராணியும் அடிக்கடி கடைக்கு வரும் நபர் என்பதால் தன்னிடம் இருந்த ரூ.24 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இதனையடுத்து மர்மநபரும் ரூ.2 லட்சம் இருப்பதாக கூறி ஒரு பையை கொடுத்துள்ளார். அதன்பின் அந்த நபர் சென்று நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில் சந்தேகம் ஏற்பட்டு நாகராணி அந்த பையை பார்த்தபோது அதில் பணம் ஏதும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதற்கு பதிலாக ஒரு சிறிய நோட்டு இருந்துள்ளது. இதனையடுத்து ஏமாற்றமடைந்ததை அறிந்த நாகராணி இதுகுறித்து சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.