லாரி ஏரிக்குள் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலத்தில் இருந்து ஒரு லாரி செங்கல்பாரம் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை சுப்பிரமணியன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் தொழிலாளர்களான மணி(60), ஜானகி(40) ஆகியோரும் உடன் இருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் ஏரி அருகே இருக்கும் வளைவில் லாரி திரும்ப முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரை உடைத்து கொண்டு ஏரிக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுப்பிரமணியம், மணி, ஜானகி ஆகிய மூன்று பேரும் தண்ணீரில் நீந்தி கவிழ்ந்து கிடந்த லாரியின் மேற்புறத்தில் ஏறி அமர்ந்து உயிர் தப்பினர். இதனை எடுத்து எரிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 3 பேரையும் பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.