குளுகுளு சீசனை முன்னிட்டு ரோஜா பூங்காவிற்கு 2 1/4 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை சுற்றுலா தலமான கொடைக்கானலில் குளுகுளு சீசன் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் முக்கிய இடங்களான பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவிற்கு அதிகமாக சென்று வருவர். மேலும் அப்சர்வேட்டரி பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பூங்கா தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. அங்கு 1,500 வகையான ரோஜா செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொடைக்கானலில் நிலவிய குளுகுளு சீசன் காலத்தில் ரோஜா பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததாக தோட்டக்கலைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவிற்கு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற சீசன் காலத்தை முன்னிட்டு ரோஜா பூங்காவில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சீசனை முன்னிட்டு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ரோஜாவை பார்த்து ரசித்து செல்கின்றனர். இதன் மூலமாக நிர்வாகத்திற்கு 70 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் பூங்காவிற்கு இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது என்று கூறினர். இதற்கிடையே பூங்காவிற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.