கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை விற்கும் இது வடமாநில வாலிபர் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை காவல்துறையினருக்கு பணிக்கம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் வந்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெருந்துறை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கஞ்சா கலந்த 30 சாக்லேட்டுகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மேற்கு வங்காள மாநிலம் பர்கானா மாவட்டம் கேட்டார் ஜாக் பகுதியை சேர்ந்த ராகுல் மண்டேல் மற்றும் ஒடிசா மாநிலம் ஜெலஸ்பூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஸ் குமார் பெஹ்ரா என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் பணிக்கம்பாளையத்தில் கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாதாரணமான போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு ஓரளவு சிறிது நேரம் மட்டும் தான் போதை இருக்கும் ஆனால் அதற்கு பதிலாக கஞ்சா கலந்த சாக்லேட்டை சுவைத்தால் 12 மணி நேரத்துக்கு மேலாக போதை இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராகுல் மன்டேல் மற்றும் சந்தோஸ் குமார் பெஹ்ரா ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த கஞ்சா கலந்த சாக்லேட்டையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறுவதாவது, தற்போது கஞ்சா கலந்த சாக்லெட்டுகள் பணிக்கம்பாளையம் பகுதியில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன்களை மிகுந்த கண்காணிப்புடன் வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களது எதிர்கால வாழ்க்கை நன்மை பயப்பதாக அமையும் என்றார்.