முன்னாள் அமைச்சர் ஒருவர் இபிஎஸ்-ஐ முதல்வராக்க பாடுபடுவேன் என கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க கட்சியின் கழக அமைப்பு செயலாளர் செல்லூர் கே. ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அதில் இ.பி.எஸ் நான் கேட்காமலே எனக்கு கழக அமைப்பு செயலாளர் என்ற பதவியை வழங்கியுள்ளார். நான் எப்போதும் அ.தி.மு.க கட்சிக்கும், எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் விசுவாசமாக இருப்பேன்.
அதன் பிறகு நம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருக்க வேண்டும் என அம்மா ஜெயலலிதா கூறியதால், எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். இந்நிலையில் அ.தி.மு.க கட்சியின் கோவிலாக விளங்கும் கட்சி அலுவலகத்தில் வன்முறை நடந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும், இ.பி.எஸ் தலைமையில் கட்சி ஒன்றுபட்டு இருக்கிறது எனவும், கட்சியை விட்டு விலகி சென்றவர்கள் இ.பி.எஸ்-ஐ சந்தித்து மன்னிப்பு கேட்டால் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் கூறினார்.
இதனையடுத்து ஓ.பி.எஸ் கட்சிக்கு விரோதமான செயல்களை செய்வதால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது எனவும், கட்சி யார் பக்கம் இருக்கிறது என்பதை ஓ.பி.எஸ் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், அ.தி.மு.கவில் ஜாதி ரீதியாக எந்த ஒரு பதவிகளும் வழங்கப் படுவதில்லை எனவும் கூறினார். மேலும் ஓ.பி.எஸ் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வருத்தம் தெரிவித்தால் அவர் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் எனவும், இபிஎஸ் பின்னால் வரலாம் எனவும், அ.தி.மு.கவை நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம் என்றும், அ.தி.மு.கவை நம்பி கெட்டவர்கள் என்று யாருமே கிடையாது எனவும் கூறினார்.