திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடுகளை தடுக்க யுபிஐ க்யூஆர் ஸ்கேன் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள், தரிசன டிக்கெட்டுகள் பெற பணம் செலுத்தும் நிலையில் இருந்து பணம் இல்லா பரிவர்த்தனை என்ற முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனையான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் அறைகள் பெறும் பக்தர்கள் வழங்கும் டெபாசிட் தொகை, அறையை காலி செய்யும்போது தேவஸ்தானம் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தந்த வங்கிகளுக்கு திருப்பி செலுத்தி விடுகிறது.
ஆனால் பக்தர்களின் வங்கி கணக்கிற்கு அந்த பணம் செல்வதற்கு 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. இதை தவிர்க்க புதிய திட்டத்தை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முறையில் தங்கும் அறைகளை ஒதுக்கும்போது யுபிஐ கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதன்மூலம் பக்தர்கள் அறைகள் பெற விரைவில் பணம் செலுத்தப்படுவதோடு அறைகள் காலி செய்த பின்னர் பக்தர்களின் முன் வைப்பு தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தின் வரவேற்பை பொருத்து அறைகள், லட்டு பெறுவதற்கும் தரிசன டிக்கெட் உள்ளிட்ட அனைத்து பண பரிமாற்றத்திற்கும் யுபிஐ க்யூஆர் கோடு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக அமல்படுத்தினால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.