முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, நாட்டின் பொருளாதாரம் குறித்து டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் உரையாற்றினார். இந்த உரையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு 3 முக்கிய காரணங்களை முன் வைத்தார். அபத்தமான முடிவான பணமதிப்பு நீக்கம், தவறான வழியில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, வங்கித்துறையை செயல்படாத வண்ணம் முடக்கி வைத்திருப்பது ஆகிய மூன்று காரணங்களே நாடு சந்தித்துவரும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் எனத் தெரிவித்தார்.
சர்வதேச சூழல்களால் இந்தியா சந்தித்துவரும் பாதிப்புகள் பற்றி மாணவர்கள் கேட்ட கேள்விக்கு, மத்திய கிழக்கு நாடுகளின் கிளர்ச்சி, அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் இந்தியாவில் பாதிப்புகளை தந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசு கண்டறிய வேண்டும் என்றார். வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கியத் துறைகளான சுரங்கம், உற்பத்தித்துறை, கணிமம், எரிவாயு ஆகிய அனைத்துத் துறைகளும் கடும் வீழச்சியைச் சந்தித்துள்ளது வருத்தத்திற்குரிய நிலை என சிதம்பரம் தெரிவித்தார்.
இத்தகைய பிரச்னைகளில் இருந்து மீண்டு வரும் விதத்தில் எந்தவொரு அம்சமும் இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது என சிதம்பரம் குற்றம்சாட்டினார் .