இலங்கையின் சபாநாயகர் நாட்டின் இந்திய தூதரை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நடக்கும் மக்களின் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது. எனவே, கடந்த 13ஆம் தேதி அன்று அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். கடந்த வியாழக்கிழமை அன்று அவர் தன் மனைவியுடன் சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக அறிவித்தார். நேற்று ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபர் பதவியை முறைப்படி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் நாட்டின் சபாநாயகரான மகிந்த யாப்பா அபேவர்த்தனே, நாட்டின் இந்திய தூதரை சந்தித்திருக்கிறார்.
இது பற்றி அந்நாட்டின் இந்திய தூதரகம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, இன்று காலையில் சபாநாயகர் இந்திய தூதரை சந்தித்திருக்கிறார். இந்த முக்கியமான நேரத்தில் அரசியல் கட்டமைப்பையும் ஜனநாயகத்தையும் நிலைப்படுத்துவதற்கான பாராளுமன்றத்தின் பங்களிப்பை பாராட்டியுள்ளார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஜனநாயகத்திற்கும் இந்தியா துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.