பாஜக சமூக வலைத்தளங்களில் “செல்பி வித் அண்ணாமலை” போட்டிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் கல்லூரியில் நடைபெறும் என்று பதிவிட்டு இருந்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து கல்லூரி முதல்வர்கள் கடிதம் அனுப்பினர். இந்நிலையில் பாஜக வடக்கு மாவட்ட மகளிர் அணியினர் எல்.ஆர்.ஜி கல்லூரி வெளியே நிகழ்ச்சிக்காக நின்றுகொண்டு இருந்தனர். அப்போது இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் முகப்பு வாயிலை அடைத்து மற்றொரு வழியாக மாணவிகளை வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த பாஜகவினர் பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முன்பக்க கதவுகளை திறக்க வலியுறுத்தினர். அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவிகள் தேர்வு உள்ள சமயத்தில் தங்களுக்கு இதுபோன்ற இடையூறுகளை எதற்காக ஏற்படுத்துகிறீர்கள்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கல்லூரிக்கு முன்பாக இது போன்ற பிரச்சார நிகழ்ச்சிகள் நடத்த போலீசார் அனுமதி பெறவேண்டும் என்ற சூழலில் பாஜக அனுமதி பெறாத காரணத்தை கூறி கலந்து போக வேண்டும் என போலீசார் எச்சரித்தினர். அதன்பிறகு பாஜாவினர் பிரச்சாரத்தை கைவிட்டு புறப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத் திருப்பூர் மாவட்ட தலைவர் பிரவீன், மாவட்ட செயலாளர் சமீர் அகமது ஆகியோர் இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வீனித்திடம் மனு அளித்தனர். அதில், இந்த நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் பாஜகவினர் கல்லூரியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளனர். எந்த ஒரு மாணவரின் தனிப்பட்ட முறையிலான அரசியல் செயல்பாட்டை அனுமதிக்க வேண்டும். ஆனால் கல்லூரிக்கு சம்பந்தம் இல்லாத வெளி நபர் மூலம் நேரடியாக அரசியல் கட்சியினர் கல்லூரி வளாகத்தில் செயல்பட அனுமதிப்பது கல்வி வளாக அனுமதியை சீர்குலைக்கும். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு கல்லூரிக்கு அவபெயர் ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது