Categories
தேனி மாவட்ட செய்திகள்

‘தமிழ்நாட்டிலும் கொரோனாவா?’ தேனி மருத்துவமனையில் இருவர் அனுமதி

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இரண்டு நபர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சீனாவில் கடந்த ஒரு மாதமாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜப்பான், ஹாங்காங், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாகக் கூறி, மாநில பேரிடராக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சீனாவில் படித்த, பணிபுரிந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் கொரோனா வைரஸ் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அறிகுறியால் தேனியில் இருவர் சிகிச்சைப் பெற்று வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |