பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலவாசல் குடியிருப்பு பகுதியில் பிரபல ரவுடியான ஜெபமணி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த ஜெபமணி ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜெபமணி தனது 5 வயது மகளின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து மது குடித்துவிட்டு ஜெபமணி வீட்டிற்கு அருகே நின்று ஒருவருடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ஜெபமணியை கத்தியால் சரமாரியாக குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெபமணியின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.