இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்த 2 குடும்பத்தினரை கடலோர காவல் படையினர் மீட்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு 104 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் இருந்து கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பலில் தனுஷ்கோடி அருகே உள்ள இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள 1-வது மணல் திட்டில் இலங்கையை சேர்ந்த 7 அகதிகள் தவிப்பதை பார்த்தனர். இதனைதொடர்ந்து கடலோர காவல் படையினர் அங்கு சென்று 3 குழந்தைகள் உள்ளிட்ட 7 அகதிகளை மீட்டனர். இதனையடுத்து அவர்களை கப்பலில் ஏற்றி உணவுப்பொருட்கள் கொடுத்து இரவு அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்தனர். அதன்பின் ராமேசுவரம் கடலோர காவல்படையினரிடம் 7 பேரும் ஒப்படைக்கப்பட்டு மண்டபம் கடலோர காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் இலங்கை வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த விக்னேசுவரன், இவருடைய மனைவி ராஜகுமாரி, மகன்கள் குமரன், வசி மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமரன், இவருடைய மனைவி மதினி, மகன் பவின் என்பதும் தெரியவந்துள்ளது. அகதியாக வந்துள்ள ராஜகுமாரி காவல்துறையினரிடம் கூறியதாவது, “இலங்கையில் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளதால் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் எந்த வேலையும் இல்லாததால் தான் தமிழகத்துக்கு தப்பி வந்தோம். எங்களை தலைமன்னாரிலிருந்து 2 படகோட்டிகள்பகல் 12 மணிக்கு பிளாஸ்டிக் படகில் அழைத்து வந்தனர். மேலும் நாங்கள் இலங்கை பணம் ரூ.2 லட்சம் அவர்களுக்கு கொடுத்தோம். மேலும் வரும் போது பயங்கர காற்றும், கடல் சீற்றமும் இருந்ததால் குழந்தைகளுடன் கரை சேர்ந்து விடுவோமா என்ற பயம் இருந்தது என கூறினார்.