அடுத்த மூன்று மணிநேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தென்காசி, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல், திருப்பூர், திருப்பத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.