சேலம் மாநகரம் மெய்யனூர் இட்டேரி பகுதியின் மயானத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். சுமார் மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கட்டடம் கட்டுவதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வெளியேற்றி, அருகேயுள்ள இடத்தில் வசித்துக்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஒதுக்கிய இடத்தில் அவர்கள் அனைவரும் வசித்துவந்துள்ளனர். இச்சூழலில் தற்போது அவர்கள் வசித்துவரும் இடத்தில் மின்சார வாரிய கட்டடம் கட்டவுள்ளதாகவும் இதற்கு பிப்ரவரி 7ஆம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்ட இருப்பதால் உடனடியாக இந்தக் இடத்தைக் காலி செய்திட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும் என்றும் இல்லையென்றால் வீடுகளைக் காலி செய்துதர கால அவகாசம் வேண்டும் என்று அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்த மாவட்ட நிர்வாகம் நேற்று காலை காவல் துறையினர் துணையோடு, அங்கு வசித்துவந்த இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினரைக் கட்டாயபடுத்தி வெளியேற்றினர்.
மேலும் அவர்கள் வசித்துவந்த வீடுகளை இயந்திரங்களைக் கொண்டு இடித்துத் தள்ளினர். மேலும் அங்கிருந்த மரங்களை இயந்திரங்களைக் கொண்டு வேரோடு பிடிங்கி எறிந்தனர். வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டதைக் கண்ட மக்கள் கதறி அழுதனர்.
இதில் சில பெண்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த அவசர ஊர்தியின் உதவியை ஏற்க மறுத்த அவர்கள், காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.