Categories
மாநில செய்திகள்

விரக்தியின் காரணமாகவே ஆளுநரிடம் திமுக மனு – அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்..!

ஆளுநரிடம் திமுக மனு கொடுத்ததற்கு விரக்தி காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு தனது பேத்தியின் காதணி விழாவிற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்று பொதுத்தேர்வு இல்லை என்று அறிவித்துள்ளோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது” என்றார்.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதால் கல்வித்துறை மூலம் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் எப்போது அறிவித்தாலும் அரசு தேர்தலை நடத்தும். விரக்தியின் காரணமாக ஆளுநரிடம் திமுக மனு கொடுத்துள்ளது. திமுக பேசும் கருத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் அவர்கள் எந்தக் கருத்தும் பேச முடியாது என்று கூறினார்.

Categories

Tech |