இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். தற்போது சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 66 ஆக உள்ளது.
அதில் சட்டப்பேரவை உறுப்பினர்களான ஓபிஎஸ்,வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எதிரணியாக இருந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த மூன்று பேரை தவிர்த்து 63 பேர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில்,ஓபிஎஸ் தரப்பு தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை இபிஎஸ் அரசு இல்லத்தில் நடத்த இருப்பதாகவும், அரசு இல்லத்தை இபிஎஸ் அரசியல் நிகழ்வுகளுக்காக பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவரை அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.