சேலம் மாநகரில் நள்ளிரவில் சாலையோரம் உறங்கும் முதியவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள காசகாரனூரில் உள்ள கடை முன்பு உறங்கிய வடமாநில முதியவர், தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவரின் சிசிடிவி காட்சிகள் நேற்று முன் தினம் (பிப். 04) வெளியானது.
இதேபோல, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி வணிக வளாக பகுதியில் நேற்று முன் தினம் இரவு பழ வியாபாரி அங்கமுத்து என்பவர், தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் .
இந்த இரண்டு சம்பவமும் ஒரே மாதிரி நடந்திருப்பதால் கொலையாளி ஒருவராக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், இரண்டாவது கொலை சம்பவத்தில் தொடர்புடையவரின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் நேற்று வெளியிட்டனர்.
இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 10 பேரை கைது செய்த சேலம் மாநகர காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.