கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஐந்து நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் நாளை முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனியாமூர் கலவரத்தை கண்டித்து தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.