கணவன், மனைவி ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் லுக்மான் ஹக்கீம்(44) -சஹர் பானு(33) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் லுக்மான் பழைய பேப்பர்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர்கள் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பாளையத்தில் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை கணவன் மனைவி இருவரும் உறவினர்களான முகமது உள்பட 2 பேருடன் நெல்லை டவுன் கருப்பந்துறை பகுதியில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் சகர்பானு தண்ணீரில் மூழ்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லுக்மான் தனது மனைவியை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கணவர் மனைவி ஆகிய இரண்டு பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.