உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு உணவு வகைகள் குறித்து தெரியப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது கிரிக்கெட் வீரர் நடராஜன், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த ஊர்வலம் 3 ரோடு வழியாக வரலட்சுமி மகால் வரை சென்றது. இந்நிலையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். அதன்பின் அங்கு உணவு திருவிழா நடைபெற்றது.
இதில் உணவு பாதுகாப்பு குறித்த 50 அரங்குகள் அமைக்கப்பட்டும், சமையல் கலைஞர் செப் தாமு முன்னிலையில் அடுப்பில்லா, அதிவேக, ஆரோக்கிய சமையல் என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 250 பெண்கள் 2 நிமிடங்களில் 500 வகையான உணவுகளை தயாரிக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அங்கு சேலம் பகுதியில் வசிக்கும் நாட்டு சர்க்கரை உற்பத்தியாளர்களையும், நுகர்வோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் 200 கிலோ எடையில் அச்சுவெல்லமும், 350 கிலோ எடையில் குண்டுவெல்லம் ஆகியவை காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும் அங்கு சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், இதுதவிர பெண்களுக்கு சமையல் போட்டி, சுவாரசியமான சாப்பாடு போட்டிகளும் நடைபெற்றது. அதன்பின் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.