கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பள்ளிகள் இயங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் இயங்குமா? இயங்காதா என குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் 70 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்காது என்று மாணவர்களுக்கு தொலைபேசி மூலமாக பள்ளி நிர்வாகங்கள் அறிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மாவட்ட தலைமை ஏலகிரி செல்வம் அறிவித்துள்ளார். மேலும் சென்னையில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில பள்ளிகளே திறக்கப்பட்டுள்ளன.இது ஒரு பக்கம் இருக்க கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.