கோவையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள சாவடியல் சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் செல்ல சாவடியல் வந்தனர். ஆனால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறி வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அந்த சோதனை சாவடியை ஒட்டி சின்னாறு செல்கிறது.
அதில் தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் இறங்கி குளித்தும் மகிழ்ந்தனர். சிலர் அதில் அருகில் உள்ள சிறிய தடுப்பணைக்கு சென்றனர். அதில் இளைஞர்கள் நீச்சல் அடித்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் குழந்தைகளை ஆழமான பகுதிகளுக்கு இறங்கவிட வேண்டாம் என்று அறிவுறுத்தினர். மேலும் ஆற்றில் குளித்த இளைஞர்களை வனப்பகுதிகள் செல்வதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியது, சாவடியல் பகுதியில் லேசான வெயிலுடன் மழைச்சாரல் என சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக இருக்கிறது. ஆனால் கோவை குற்றால அருவிக்கு செல்ல முடியவில்லை. இருப்பினும் சின்னாற்றில் போதுமான அளவுக்கு தண்ணீர் செல்கிறது. அந்த தண்ணீர் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.