சத்தியமங்கலம் அருகே நாடக கலைஞர் நடித்துக் கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உக்கரம் ஊராட்சியில் குப்பன் துறை என்ற கிராமம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் மழை வேண்டி இரண்யா நாடகம் நடத்துவது வழக்கம். அந்த நாடகத்தில் அந்த ஊரை சேர்ந்த ராஐய்யன் என்பவர் முன்னின்று நடத்துவார். இந்த நாடகத்தில் 25க்கும் மேற்பட்டவர் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் நரசிம்மன் வேடத்திலும் நாரதர் வேடத்திலும் இவரே நடிப்பார். இவர் பாடலையும், நடிப்பையும் பலரும் ரசித்து கொண்டிருப்பதால் பல வருடங்களாக இந்த நாடகம் நடைபெற்று வருகின்றது.
இந்த இரண்யா நாடகம் ஐந்து நாட்கள் நடைபெறும் கடைசி நாளான நேற்று இரவு வழக்கம் போல் நாடகம் நடந்து கொண்டிருந்தது. நாடகம் நடித்துக் கொண்டிருந்தபோதே நடிகர் ராஐய்யன் ஆடிப்பாடி மிக வேகமாக உற்சாகத்தில் பாடி கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருந்தார். பாடிக்கொண்டே இருந்தவர் திடீரென்று ஓரிடத்தில் நின்று விட்டார். நின்ற ஒரு சில வினாடியில் அப்படியே சரிந்து கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அக்கம்பக்கம் இருப்பவர்கள் அவரை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூற மீண்டும் குப்பம் துறைக்கு எடுத்துவரப்பட்டது. குப்பந்துறையில் அவருடைய இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.