திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்:
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது.
இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் “திருநெல்வேலிப் பதிகம்” பாடியிருப்பதால் அதற்கு முன்பே “திருநெல்வேலி” என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன.
கோயிலின் மூலக்கதை:
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் ராமகோனார். அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது.
இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன ராமகோனார் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார்.
அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.
அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
கோயில் அமைப்பு:
நெல்லையப்பர் கோவில் தெப்பம்:
ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.[2] அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.
அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.
கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு.
முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.
மூலவர்:
இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
அம்பாள்:
இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்
ஊர்ப்பெயர்க் காரணம்:
திருநெல்வேலி என இவ்வூர் அழைக்கப்படுவதற்கு மரபுவழிக் கதையொன்று உள்ளது:
முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராகத் திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியைச் சோதிக்கச் சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார்.
வேதபட்டரும் இறைவனின் நைவேத்தியத்திற்காகத் தினமும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார். ஒருநாள் சேகரித்த நெல்லைச் சன்னதி முன் உலரப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.
குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.
மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர், இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தைக் காணவிரைந்தார்.
நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் ஆச்சரியப்பட்டார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார்.
உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார்.
ஆனிப் பெருந்திருவிழா:
இக்கோயிலில் தினசரி பூசைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 10 நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும்.
மேலும் இங்கு ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று பிற திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
சிறப்புக்கள்:
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது
அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது.,
சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.
32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம்.
இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.