Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனது சொத்து ஆவணங்களை தர மாட்டேங்கிறாங்க”… பாதிக்கப்பட்டவர் கொடுத்த மனு…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

மதுரை மாவட்டம் பீ.பீ.குளத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் “நான் கூடல்நகரிலுள்ள கூட்டுறவு பணியாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த 2004ஆம் வருடத்தில் எனது பெயரில் இருந்த சொத்தின் அசல் பத்திரத்தையும், என்னுடைய மனைவியின் பெயரிலுள்ள சொத்தின் அசல் பத்திரத்தையும் அந்த சங்கத்தில் அடமானமாக வைத்து ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றேன். அந்த அடமானக் கடன்தொகை முழுவதையும் 12/08/2015 அன்று செலுத்தி விட்டேன். இதனையடுத்து கடன் தொகை முழுதும் செலுத்தப்பட்டுவிட்டது என கூறி ரசீதும் அளித்தனர்.

அதன்பின் எங்களின் சொத்து அசல் ஆவணங்களை திருப்பிதருமாறு கேட்டோம். அவ்வாறு பல முறை கேட்டும் கொடுக்கவில்லை. மேலும் இதுவரையிலும் முறையான பதிலும் சொல்வதில்லை. ஆகவே அசல் ஆவணங்களை திருப்பி கொடுக்கவேண்டும் எனவும் இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கும்படியும் உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு கோர்ட்டின் தலைவர் பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி போன்றோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனிடையில் இந்த வழக்கு தொடர்பாக கூட்டுறவு பணியாளர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் மனுதாரருக்கு சொந்தமான அசல் பத்திரங்களை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும். புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய்.25 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.5 ஆயிரத்தையும் கூடல் நகர் கூட்டுறவு பணியாளர் சங்கம் உடனே வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |