டீக்கடையில் சிலிண்டர் வெடித்து சிதறியதால் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் மூசா(47) என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். மேலும் சேகர்(52), பிரவீன்(25) ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று அதிகாலை மூசா கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது அது காலியானது தெரிந்தது. இதனால் கடையில் இருந்த புதிய சிலிண்டரை அடுப்பில் இணைத்து பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த ஊழியர்கள் கடையை விட்டு வெளியேற முயற்சி செய்வதற்குள் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் மூசா, சேகர், பிரவீன், டீ குடிக்க வந்த சசிதரன்(63) ,சுசீலா(50), சுதா(43), பக்ருதீன்(35), சுப்பையா(66) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரச மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.