காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு காவிரி கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் நீரில் குளிப்பதோ, துணி துவைப்பதோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் வசித்து வரும் நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 குடும்பங்களை சேர்ந்த 180 நபர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தங்கியுள்ள நபர்களுக்கு மருத்துவக்குழுவினர் வெப்பநிலை பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகளில் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு மற்றும் பிற வசதிகள் குறித்து கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.