தொழில் தொடங்க கடன் பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் 4 லட்சம், 63 பவுன் நகைகளை மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தேனி மாவட்டத்தில் இருக்கும் கீழஓடைத்தெருவை தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி சித்ரா. இவர் தேனி சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் சுய தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக கடன் பெறுவதற்கு சென்ற 2016ம் வருடம் தேனியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றேன். அப்போது என்னிடம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த மருத துரை என்பவர் தன்னை வங்கியின் கடன் பிரிவு மேலாளர் என கூறி 23 லட்சம் கடன் பெற்று தருவதாகவும் அதற்கு சொத்து ஆவணங்கள் எடுத்து வருமாறும் கூறினார்.
ஆனால் என்னிடம் ஆவணங்கள் இல்லாததால் எனது 63 பவுன் தங்க நகைகளை அடமானம் வைத்து முன்பணம் கொடுக்கச் சொன்னேன். அதற்கு அவர் தனது பெயரில் வட்டி இல்லாமல் அடகு வைப்பதாக சொல்லி நகையை பெற்றுக் கொண்டார். பின் அவர் நகையை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தார். இதையடுத்து அந்த நகை ஏலம் போய்விடும் எனக் கூறி நகையை மீட்பதற்காக ரூபாய் 4 லட்சம் கேட்டார். நானும் நகையை மீட்பதற்காக 4 லட்சத்தை கொடுத்தேன்.
ஆனால் அவர் நகையையும் தராமல் பணத்தையும் தராமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது அவரும், அவரின் குடும்பத்தாரும் என்னை மிரட்டுகிறார்கள் என மனுவில் கூறியுள்ளார். இதன் பேரில் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போலீசருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் மருத துரை, அவரின் மனைவி திவ்யா, திவ்யாவின் பெற்றோர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மருத துரை வங்கி கடன் பிரிவு மேலாளர் இல்லை என்றும் கடன் பெற்று தரும் முகவர் போல் நடித்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.