மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மகன் விக்னேஷ்வர். 12ம் வகுப்பு படித்து வந்த இவர் தன் 3 நண்பர்களுடன் சேர்ந்து கூடல் நகரில் உள்ள ரயில்கள் நிறுத்தும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த நண்பர்கள் 4 பேரும் ரயில் பெட்டிகளில் மீது ஏறி விளையாடி, தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷ்வர் ரயில் பெட்டியின் மீது ஏறி தன் செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது மேல சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் இருந்து விக்னேஷ்வர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் அவர் ரயில் பெட்டியின் மேலே இருந்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின் அங்கு வந்த போலிஸார் விக்னேஷ் வரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரயில் பெட்டி மீது ஏறி செல்ஃபி எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.