கடலூர் முதுநகர் பாரத ஸ்டேட் வங்கி கிளை வளாகத்தில் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிம் இல் பணம் எடுக்க முகக்கவசம் அணிந்து 2 மர்ம நபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் வேறு ஒரு வங்கிக்கான ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் எந்திரத்தில் பலமுறை பணம் எடுத்தனர். அவர்கள் பணமெடுத்த சில வினாடியில் ஏடிஎம் மையத்தில் மின் இணைப்பு துண்டித்தது. இதனால் பண பரிவர்த்தனையை நிறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் எங்களுக்கு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை என்றும், அந்த பணத்தை எங்களது வங்கி கணக்கில் மீண்டும் சேர்க்குமாறு ஆன்லைன் மூலம் தாங்கள் கணக்கு வைத்துள்ள சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் கொடுத்தனர். அதன் மூலம் மீண்டும் பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது. அதனை போல பாரஸ்ட் ஸ்டேட் வங்கி ஏடிஎம் எந்திரத்தை பயன்படுத்தி இதுவரை ரூ.2,16,500 நூதன முறையில் மோசடி செய்துள்ளனர். இது குறித்து கடலூர் முத்துநகர் ஸ்டேட் வங்கி கிளையின் முதன்மை மேலாளர் கவிதா சங்கரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் 2 பேரையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.