இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இவற்றில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்து தொடரையும் கைப்பற்றியது. இதற்கிடையில் ஆட்டநாயகனாக ரிஷப்பண்ட் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தொடர் நாயகன் விருதை ஹர்த்திக் பாண்ட்யா தட்டிச்சென்றார். இப்போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்துவீச்சில் 4 விக்கெட்டும், பேட்டிங்கில் 71 ரன்களும் எடுத்து இருந்தார். இதன் வாயிலாக அவர் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் எனும் வரலாற்றுச் சாதனையை பாண்ட்யா படைத்திருக்கிறார்.
இதற்கு முன் ஸ்ரீகாந்த் (1988), சச்சின் (1998), கங்குலி (1999 & 2000), யுவராஜ் (2008 & 2011) போன்றோர் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களும், 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். தற்போது பாண்ட்யா தான் முதல்முறையாக வெளிநாட்டு மண்ணில் இதை சாதித்து இருக்கிறார். மேலும் ஹார்த்திக் பாண்ட்யா அதை விட டெஸ்ட், ஒரு நாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 50+ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியவீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். முன்பே டெஸ்ட் (52* ரன்கள் & 5/28 விக்கெட், 2018) மற்றும் டி20 கிரிக்கெட்டில் (51 ரன்கள் & 4/33 விக்கெட், 2022) அவர் 50+ ரன்களும் 4 விக்கெட்களும் இதே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் பதிவுசெய்துள்ளார். உலகளவில் பாகிஸ்தானின் முஹமது ஹபீசுக்கு பின் இந்த சாதனையை செய்யும் 2-வது வீரராகபாண்ட்யா இருக்கிறார்.