இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் ஜகுருத்தீன் அகமது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து மக்கள் எதிர்பார்த்ததை தவிர மற்ற அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறது. அதன் பிறகு தற்போது தமிழக அரசு மின்வாரிய துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமாக மின்கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதோடு மின்கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், மத்திய அரசு மானியத்தை ரத்து செய்து விடுவோம் என்று கூறியதால் தான் கட்டணம் உயர்த்தப்படுவதாக திமுக அரசு கூறியதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நிலையில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு என்ன காரணம் என்பதை தமிழக அரசு வெளியிடாமல் மின்கட்டணத்தை உயர்த்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இதனையடுத்து தமிழக மின்சார துறையில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல் இருந்தது, குறித்த நேரத்தில் மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றாமல் இருந்தது, தனியார் மின் ஆலைகளில் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மட்டுமே மின்வாரியத் துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு தமிழக மக்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். அதுமட்டுமின்றி ஆளும் ஆம் அத்மி கட்சி தாங்கள் ஆட்சி புரியும் மாநிலங்களில் சுமார் 300 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கும்போது, தமிழகத்தில் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை திமுக அரசு பறித்துக் கொள்ள நினைப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை தமிழக மக்களின் தலையில் கட்டுவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே மின்சார உயர்வு குறித்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.