பிரபல நாட்டில் பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது முதல் மந்திரி முகமது சனுஷி முகமது நூர் திருமணம் தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் முஸ்லிம் பெண்களின் வயது 16 வயதிலிருந்து 18 வயதாக அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிக்கை சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16-லிருந்து 18-ஆக உயர்த்தப்பட்டுள்ளதோடு, யாரேனும் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ள விரும்புவர்கள் முறைப்படி இஸ்லாமிய நீதிமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற்று ஒப்படைக்க வேண்டும். இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதி இன்றி ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்பவர்களுக்கு அபராத தொகையை அதிகரிப்பதற்கான சட்ட மசோதாவும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பாக திருமணம் செய்து கொள்வதால் அவர்களுடைய லட்சியங்களை அடைய முடியாமல் போவதோடு, உடல் அளவிலும் கடுமையான பாதிப்புகளை சந்திப்பதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.