லாரி புக்கிங் ஏஜெண்டை ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் முனியசாமி கோவிலின் பின்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் சின்னகொல்லப்பட்டி கிராமத்தில் வசித்த பவானிகுமார்(45) என்பது தெரியவந்தது.
இவர் லாரிகளுக்கு சரக்கு ஏற்றும் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பவானிகுமார் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம்(48) என்பவருடன் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் செல்வம் பவானி குமாரை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இதனை அடுத்து தலைமறைவாக இருந்த செல்வதை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.