கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருவர் பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று பச்சை நிற உடை அணிந்த ஒருவர் சென்றுள்ளார். அவர் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அடுத்து அந்த நபர் பூசணிக்காயை வைத்து அதன் மீது மஞ்சள் பொடியை கொட்டி வெற்றிலை பாக்கு வைத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த மர்ம நபரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அரசலாபுரத்தை சேர்ந்த ரகுராமன் என்பது தெரியவந்தது. மேலும் ரகுராமன் கூறியதாவது, எங்கள் ஊரில் சிலர் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்களையும் விற்பனை செய்கின்றனர்.
அவர்கள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு பினாமியாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்ததால் என்னை தாக்கியதோடு, எனது குடும்பத்தினரையும் தாக்க அவர்கள் திட்டமிட்டனர். எனவே அந்த நபர்களிடமிருந்து என்னையும், எனது குடும்பத்தினரையும் காப்பாற்றுமாறு அந்த நபர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை எடுத்து பூசணிக்காயை வைத்து என்ன செய்ய இருந்தீர்கள் என போலீசார் கேட்டனர். அதற்கு பூசணிக்காயை உடைப்பதற்கு கொண்டு வந்தேன். அதற்குள் போலீசார் என்னை அப்புறப்படுத்தி விட்டார்கள் என அந்த நபர் கூறியுள்ளார்.