நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியாக பதிலளிக்க தயார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தேசிய ஓட்டுரிப்பு அறுவை சிகிச்சை தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது “இந்த மருத்துவமனையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. 6000 பேருக்கு செயற்கை கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. கைவிரல் துண்டிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சட்டசபையில் இரண்டாவது முறையாக மீண்டும் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதனை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு மத்திய அரசு உள்துறை மூலம் மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நீட் மசோதா நிறைவேற்றப்பட்டதில் சட்ட மன்றத்திற்கு உள்ள அதிகாரம் என்ன, இது ஒன்றிய அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறதா, தேசிய ஆணைய சட்டத்திற்கு அது உட்பட்டதா? முரண்பட்டு அமைந்துள்ளதா? நீட் தேர்வு தகுதி அடிப்படையிலான தேர்வு எனவும் தரமான கல்வி, இது வெளிப்படையான தன்மை, தேசிய தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு ஆகிய வரலாற்று சீர்திருத்தங்களை உள்ளடக்கி உள்ளது எனவும் அதற்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா என்றும் கேட்டுள்ளது.
இது நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்துமா, இந்திய அரசியல் சட்டத்தை மீறுகிறதா, தேசிய கல்வி கொள்கைக்கு முரணானதா என்றும் விளக்கங்கள் கோரி உள்ளது. இத்தகைய குறிப்புகள் மாணவர்களுககு எதிரானது, எந்த விதத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, இவற்றை எல்லாம் ஆராய்ந்து பதில் அளிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீல்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு கேட்டுள்ள கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்கள் உதவியுடன் விரிவான பதில்கள் தயாரித்துள்ளோம். நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதே இந்த அரசின் உறுதியான கொள்கை” என்று அவர் தெரிவித்துள்ளார்.