2020-21 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி சரிவு, விற்பனை சரிவு, வேலையின்மை, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காணப்படுகின்றது. கடந்த 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமும் இருந்தது. இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த நிதி கொள்கை கூட்டத்தில், 2019-20 நிதியாண்டின் மொத்த ஜிடிபி 5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இதை அடுத்து, இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கடந்த 31-ஆம் தேதியன்று தாக்கல் செய்த இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையில், 2020-21 நிதியாண்டுக்கான ஜிடிபி 6-6.5 சதவிகிதமாக இருக்கலாம் எனச் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில், 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6 சதவீதமாக இருக்கும் என்றும், முதல் அறையாண்டில் ஜிடிபி விகிதம் 5.5-6 சதவீதமாக இருக்கும் என்றும், மூன்றாம் காலாண்டில் 6.2 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.