சீனாவில் குற்றம் நடைபெற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த கொசுவின் இரத்தத்தை ஆய்வு மேற்கொண்டு திருடனை காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவமானது நடந்துள்ளது.
சீனாவின் புஜியான் மாகாணத்தில் புஜோ எனும் இடம் இருக்கிறது. இங்கு சென்ற சில நாட்களுக்கு முன் பூட்டிகிடந்த வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கைவரிசை காட்டி விலை மதிப்புமிக்க பொருட்களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் திருட்டு நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் கதவானது உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பால்கனியின் வழியே வீட்டிற்குள் திருடன் நுழைந்தது தெரியவந்தது.
அதன்பின் காவல்துறையினரும் பால்கனி வழியே வீட்டுக்கு சென்று பார்த்தனர். இந்நிலையில் வீட்டில் திருட்டு நடந்திருந்தது தெரியவந்தது. அதுமட்டுமின்றி வீட்டு சமையல் அறையில் திருடன் நூடுல்ஸ் மற்றும் முட்டை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. அத்துடன் வீட்டின் சுவற்றில் கொசுவின் ரத்தக் கறை படிந்து இருந்ததையும், அதனருகே இரண்டு கொசுக்கள் இறந்துகிடந்ததையும் காவல்துறையினர் பார்த்தனர். இதனிடையில் புதியதாக வர்ணம் பூசப்பட்ட வீடு என்று வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தன்னை கடித்த கொசுவை திருடன் சுவற்றுடன் நசுக்கி இருக்கலாம் என காவல்துறையினர் கருதினர்.
இதனால் கொசு நசுக்கப்பட்டிருந்த சுவற்றில் படிந்துஇருந்த ரத்தக் கறை தடயவியல் ஆதாரமாக எடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வில் கிடைத்த டிஎன்ஏ முடிவை அப்பகுதியில் குற்றபின்னணி கொண்ட திருடர்களின் டிஎன்ஏ விபரங்களுடன் காவல்துறையினர் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது குற்ற பின்னணிகொண்ட சாய் என்ற பெயர் கொண்ட நபரின் ரத்தத்தின் டிஎன்ஏவும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த ரத்தக்கறையின் டிஎன்ஏவும் பொருந்தியது. அதன்பின் சாய் அந்த வீட்டில் நுழைந்து திருடியதை காவல்துறையினர் உறுதிசெய்து அவரை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.