தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.