பல்லாவரம் சாலையில் பாலத்தின் அடியில் கேபிளில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் 200 அடி ரேடியல் சாலையில் பல்லாவரம் பெரிய ஏரிகளை இணைக்கும் சாலையின் அடியில் புதிய பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்திற்கு அடியில் செல்லும் மின்சார கேபிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பாலத்திலிருந்து விண்ணை நோக்கி பல அடி உயரத்திற்கு கரும்புகை மூட்டமாக இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த தீ விபத்தால் பாலத்தின் அடியில் உள்ள கேபிள் வயர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கரும்புகை பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கேபிளில் ஏற்பட்ட தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனால் ரேடியல் சாலையில் ஏற்பட்ட கரும்புகை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது.