Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோயிலில் ஆக்கிரமிப்பு பகுதியை அகற்ற வந்த அதிகாரிகள்…. பொதுமக்கள் செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகில் சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட வீரமார்த்தாண்டன் புதூர் பகுதியில் முப்பாத்து ஓடை அருகே சுடலைமாடசாமி கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு ஒருவர் இடத்தை தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில் உள்ள இடத்தின் வாசல் பகுதி ஓடை புறம்போக்கில் உள்ளதாக பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து எந்த முன் அறிவிப்பும் இன்றி பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் வல்சன் போஸ், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் டயானா போன்றோர் பொக்லைன் எந்திரத்துடன் நேற்று கோயிலில் ஆக்கிரமிப்பு பகுதியை அகற்றவந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கோவில் தலைவர் பகவதியப்பன், பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் சொக்கலிங்கம், ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், பொதுச் செயலாளர் மகாதேவன்பிள்ளை, பிரசார பிரிவு தலைவர் இசக்கிமுத்து, இந்து மக்கள் கட்சி தலைவர் சுபா.முத்து மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் ஆக்கிரமிப்பு பகுதியை இடிக்க விடாமல் அதிகாரிகளை முற்றுகையிட்டு தடுத்தனர். எனினும் வாசலில் இருந்த கோயில் கதவு, மேல்கூரையின் ஒருபகுதி இடிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினார்கள். அதன்பின் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகர், சகாய நகர் பஞ்சாயத்து தலைவர் மகேஷ்ஏஞ்சல் போன்றோர் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் பொதுமக்கள் ஓடையின் இருபக்கமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு கோயில் பக்கம் வாருங்கள் என கூறினார்கள். இதனால் மறுபடியும் நிலத்தை அளக்க அதிகாரிகள் முடிவுசெய்தனர். இதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் அங்கு இருந்து புறப்பட்டது. அப்போது பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்துவிட்டனர். உடனே துணைபோலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலையிட்டு, பொதுமக்களை சமாதானம் செய்து பொக்லைன் எந்திரத்தை அனுப்பிவைத்தார். அதன்பின் அங்கு பாதுகாப்புக்காக ஆரல்வாய்மொழி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சார்லஸ், தனிபிரிவு சப் -இன்ஸ்பெக்டர் மாரி செல்வம் மற்றும் பெரும்பாலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

Categories

Tech |