அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான போர்டு 20 வருடங்களாக இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்ததால் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த 10 வருடங்களில் மட்டும் அந்த நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக போர்டு கார் உற்பத்தி நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதனால் சென்னை அருகே உள்ள மறைமலைநகரில் உள்ள போர்டு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனை தொடர்ந்து அடுத்து சில மாதங்களுக்கு மட்டும் ஆலை இயங்கும் என்று அறிவித்தது. இந்த சூழலில் மறைமலைநகர் போர்ட் ஆலையில் கடைசியாக உற்பத்தி செய்யப்பட்ட காரை நேற்று அங்குள்ள ஊழியர்கள் மாலை போட்டு சோகத்தோடு வழி அனுப்பி வைத்தனர்.