காரியாபட்டி அருகே ஒரு வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் – சுஷ்மிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் குழந்தையின் தந்தையே தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்ததாகவும் கூறி குழந்தையின் தாயார் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காரியாபட்டி காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அமல்ராஜ், சுஷ்மிதா ஆகியோர் 12ஆம் வகுப்பு படிக்கும்போது காதல் செய்தது, சுஷ்மிதா 7 மாதம் கர்ப்பமாக இருந்தது, அதனால் இருவரும் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.
பின்னர், இருவீட்டாரின் பேச்சுவார்த்தையை அடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நாள்முதல் சுஷ்மிதாவிடம் அமல்ராஜ் தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டு வந்துள்ளார். சுஷ்மிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அமல்ராஜ் சுஷ்மிதாவிடம் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று கூறி பிரச்னையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து சுஷ்மிதா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரித்த காவலர்கள் அமல்ராஜை சுஷ்மிதாவிடம் சேர்ந்து வாழ்வதற்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் இருவருக்கும் பிரச்னை வர, சுஷ்மிதாவின் தந்தை மதுரை சரக டிஐஜியிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவை விசாரித்த டிஐஜி ஆனிவிஜயா இருவரிடமும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் குழந்தை இன்று வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது. ஆகவே குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அமல்ராஜ், சுஷ்மிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.