நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் வருமான வரித்துறையினரின் இந்த சோதனையின் காரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்கும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நேற்று மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்ற நெய்வேலிக்குச் சென்ற வருமான வரித்துறையினர், இரவு முழுவதும் விஜய்யிடம் விசாரணை நடத்தினர்.
வருமான வரித்துறையினரின் சோதனையில் ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான சென்னை, மதுரையில் உள்ள வீடுகளிலிருந்து இதுவரை ரூ. 77 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பாஜக தேசியச் செயலாளரான ஹெச். ராஜா, விஜய்யின் ஆதரவாளர்களை சீண்டும்படியாக ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர், ஒருவருடைய உண்மையான பெயரைச் சொன்னதுக்கே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவரெல்லாம் இப்ப என்ன ஆவார்களோ? உண்மை உண்மையா வெளிவருதே எனப் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு, இலவச டிவியை எறிந்து படமெடுத்த வீரர் ஆயிற்றே. நேர்மை? என்று பதிவிட்டிருந்தார். ஹெச். ராஜாவின் இந்தப் பதிவு விஜய் ரசிகர்களை கோபப்படுத்தும்விதமாக அமைந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் இதற்கு எதிராக கமெண்டுகளை பதிவிட்டுவருகின்றனர்.
முன்னதாக, 2017ஆம் ஆண்டு விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியான போது, ஹெச். ராஜா நடிகர் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிட்டு ஜோசப் விஜய் எனக் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.