ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை கிராமம் பாரதிநகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் சோளம் போன்ற பல வகையான விவசாயப் பயிர்களை பயிர்செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வரும் மயில்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பால்காரர் ராமசாமி – குப்புலட்சுமி தம்பதியினருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில், ஏழு ஆண் மயில்கள், ஏழு பெண் மயில்கள் என மொத்தம் 14 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், இறந்து கிடந்த மயில்களின் உடல்களைச் சேகரித்தனர். வனப்பகுதியிலிருந்து வரும் மயில்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால், மயில்களுக்கு மருந்து ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய, மயில்களின் உடல்கள் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி நடராஜ் என்பவர் கூறுகையில், “வனத்துக்குள் வாழ்வாதாரத்தை இழந்த மயில்கள் காட்டுப்பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. மயில்கள் இரை தேடி வருவதைத் தடுத்து வனப்பகுதியில் அதற்கான தேவையை நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.