நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார்.
இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதனால் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.