பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் தொழிலாளியான செல்வகுமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது அண்ணனான நேசமணி(38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வட்டக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுசீந்திரம் பழைய பாலம் வளைவு பகுதிக்கு வந்த போது முன்னால் சென்ற அரசு பேருந்தை செல்வகுமார் முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
பின்னர் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த நேசமணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.